மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அதிவேகமாக சென்று சாலை தடுப்பில் மோதிய காரில், பின் இருக்கையில் இருந்த அவர் சீட் பெல்ட் அணியாததுதான் அவரது உயிரிழப்பு முக்கிய காரணம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் எழும் எச்சரிக்கை ஒலி தடுப்பு கருவி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் மும்பை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மும்பை நகரில் கார்களில் பயணிப்பார் அனைவரும் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆகும். இதற்கு ஏற்ப அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் கார்களில் சீட் பெல்ட் வசதியை சரியாக இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும். வாடகை கார் ஓட்டுநர்கள் தங்கள் பயணிகளிடம் சீட் பெல்ட் அணிய அறிவுறுத்த வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.