தொடர் மழை நீடித்து வருவதால் குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று மதியம் உள்ள நிலவரப்படி வினாடிக்கு ஆயிரத்து 65 அடி கன அடி தண்ணீர் வந்தது.
பொய்கை அணைக்கு 2 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 450 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 3 கன அடியும் தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 71.74 அடியாக இருந்தது. அது நேற்று 71.99 அடியாக உயர்ந்தது. பேச்சிப்பாறை அணை 46.15 அடியாகவும், சிற்றூர்1 11.35 அடியாகவும், சிற்றூர் 2 11.44 அடியாகவும் உள்ளது. இதேபோல் மாம்பழத்துறையாறு 24.44 அடியாகவும், பொய்கை 21.60 அடியாகவும், முக்கடல் 18.10 அடியாகவும் உயர்ந்துள்ளது.