கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல அழகான கண்களை பற்றி வர்ணிப்பதிலும் அதை கவிதையாக மாற்றுவதிலும் வல்லவரானதால், இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன் என்று அவரே அளித்த விளக்கம் உண்டு. பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர் நாராயணன். கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்று எழுதியது முதல் பாட்டு. மூன்றாம்பிறை கண்ணே கலைமானே பாடல் இவருடைய கடைசி பாட்டு.
எப்போதுமே மஞ்சள் பட்டு வேட்டி சட்டை அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் மிகவும் பிடித்த இடம். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் தான் இவருக்கு பிடித்த இடம். வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்.
கொஞ்சம் மது அருந்தி விட்டால் சிந்தனைகள் சுறுசுறுப்பாக அடைவது வழக்கம். அதேபோல இன்ப விளையாட்டில் ஆசைகள் உண்டு என்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம். முத்தான முத்தல்லவோ பாடலை தான் மிகவும் குறைவான நேரத்திற்குள் எழுதி முடித்ததாக அவர் கூறுவார். அதேபோல அதிக நாட்கள் அவரால் முடிக்க முடியாமல் இருந்த பாடல் நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை என்ற பாடல்தான். என்னடா பொல்லாத வாழ்க்கை, சம்சாரம் என்பது வீணை ஆகிய இரண்டு பாடல்கள்தான் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த பாடல் கேட்டுக் கொண்டே இருப்பார்.