வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும்போது கொரோனா பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து தொகுதியிலும் உள்ள பொது மக்கள் அந்தந்த தொகுதியிலுள்ள வாக்கு மையங்களுக்குச் சென்று வாக்களித்துள்ளனர். இந்த வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதியன்று தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் தொடர்பாக சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, தேர்தல் தாசில்தார் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் என்பவர் தலைமை தாங்கி பேசியுள்ளார். இதில் வேட்பாளர் முகமது அபுபக்கர், எம்.எல்.ஏ பூங்கோதை, எம்.எல்.ஏ சதன், திருமலைக்குமார், ராஜா மற்றும் பல வேட்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது தங்களால் நியமனம் செய்யப்படும் முகவர்கள் பட்டியலையும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக 10 சதவீத கூடுதல் முகவர்கள் பட்டியலையும் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க போதுமான இட வசதி உள்ளதால் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது போலவே 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ள இருக்கும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்களும் வருகின்ற 28 ஆம் தேதி கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.