கள்ளக்காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மோஹ்சின் என்பவர் வசித்து வந்தார். இவர் உத்தர காண்ட் மாநிலம் நைனிடால் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஓடிவிட்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது. இதனையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள ஒரு வீட்டில் அந்தப் பெண்ணை மோஹ்சின் வாடகைக்கு தங்க வைத்தார். ஆனால் மோஹ்சின் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். எனினும் அந்த பெண்ணுடன் தனது நட்பை மோஹ்சின் வளர்த்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணுடன் மோஹ்சின் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கியுள்ளார். இதனிடையில் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு அவர்கள் ஜெய்ப்பூரில் இருக்கும் இடத்தை அந்தப் பெண்ணின் கணவர் கண்டறிந்துள்ளார். அதன்பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணின் கணவர் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது மோஹ்சின் அந்த பெண்ணின் கணவரை பார்த்ததும் பயத்தில் வீட்டின் 5-வது மாடியில் இருந்து குதித்துவிட்டார். இதனால் மோஹ்சின் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மோஹ்சின் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனிடையில் கள்ளக்காதலி மற்றும் அவரது கணவர் தலைமறைவாகி இருக்கின்றனர்.