குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் கண்ணன்-குமுதவள்ளி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் குமுதவள்ளியின் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கண்ணன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்ணனுக்கும், குமுதவள்ளிக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த கண்ணன் அரிவாளால் குமுதவள்ளியின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த குமுதவள்ளியை அவரது உறவினர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குமுதவள்ளியின் மகன் சந்தோஷ் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.