அரசு மருத்துவமனையில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாரியம்மன் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரை பிச்சையா வேலைக்கு செல்ல வேண்டாம் என கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மாரியம்மாள் தொடர்ந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிச்சையா மருத்துவமனை வளாகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மாரியம்மாளை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வயிற்றில் வெட்டினார். இதனால் குடல் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாரியம்மாளை சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு மாரியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து ஐகிரௌண்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிச்சையா , மாரியம்மாள் இருவரும் 2-வதாக திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் மாரியம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிச்சையா அவரை வெட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பிச்சையா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.