கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 200 மில்லி மீட்டர் மழை அளவானது பதிவாகியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் தெற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த கனமழையினால் சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளின் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் கனத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை புத்தளம், திருகோணமலை,காலி ஆகிய மாவட்டங்கள் கனமழையில் பாதிப்படைந்துள்ளன. அதிலும் பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கன மழையினால் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4300 க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடரினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக 63 குடும்பங்களைச் சேர்ந்த 250க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேலும் வலுவடைந்தள்ளது. இது இலங்கையின் வடக்கு நோக்கி செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வங்க கடலை ஒட்டிய பகுதிகளில் 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.