மாநிலத்திற்கு வர வேண்டியதை கேட்டால் எஜமானர் மனசு கோணி விடுமென்ற பயம் என தமிழக அரசு குறித்து கமலஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?
மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.
ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.
— Kamal Haasan (@ikamalhaasan) May 17, 2020
இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமலஹாசன், ரூ. 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளில் நடவடிக்கைகள் குறித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் அவ்வப்போது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருவது வாடிக்கையாக உள்ளது. முன்னதாக உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.