கல்லுாரிகளில் பாலியல் பிரச்னை தொடர்பாக மாணவ -மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்து செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவிகள் தங்களுக்கென செல்போன்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையில் செல்போன் கேமராக்களில் படம் எடுத்தும், போனில் பேசும்போது அதை பதிவு செய்தும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையை போக்க கல்லுாரிகள் மற்றும் போலீசார் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் உரிய பாதுகாப்பையும், கண்ணியத்தையும் அளிக்க வேண்டும்.
இதற்குரிய தேசிய அளவிலான சிறப்பு சட்டம், 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. பெண்களுக்கான உரிமை மற்றும் அவர்களுக்குரிய கவுரவம் அனைத்து இடங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியைகள், பணியாளர்கள் மற்றும் படிக்கும் மாணவிகள் உள்ளிட்டோருக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படாமல் கல்லுாரிகளில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை, தண்டனை, இடைக்கால நடவடிக்கை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டோருக்கு உரிய கவுன்சிலிங் அளித்து, அவர்களுக்கு நிவாரணம் பெற்று தர வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.