கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17 ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூராடியதுடன், தீ வைத்து எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும் அரசு அமைத்த குழு ஆய்வு செய்துள்ளது. எனவே மீண்டும் பள்ளி திறக்க அனுமதி அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர் சுரேஷ் குமார் முன்பு.விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆட்சியர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சீரமைப்பு பணிகள் பள்ளி நிர்வாகம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
அதன்பிறகு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளதாகவும் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்தார். வாதங்களை கேட்ட நீதிபதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க பள்ளிக்கு அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகு நிலைமையை பொருத்து மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு பள்ளிக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறையிடம் பள்ளி நிர்வாகம் மனு அளிக்கலாம் என்றும் அதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதுகாப்புக்கு தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும் பள்ளி நிர்வாக கலந்த ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகின்ற திங்கள்கிழமை தள்ளி வைத்துள்ளார்.