காபூல் விமான நிலையத்திற்கு தலீபான்கள் சீல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். மேலும் ஆப்கானைச் சேர்ந்தவர்களே தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் மீட்புப் பணிகளின் காரணமாக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்துள்ளனர். மேலும் காவல் விமான நிலையமானது அமெரிக்கா படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையில் வரும் 31-ஆம் தேதிக்கு பிறகு மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு அமெரிக்கா படைகள் திரும்பப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு காபூல் விமான நிலையத்தில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 13 அமெரிக்கா வீரர்கள் உட்பட மொத்தம் 19௦ பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஒரு பிரிவான கோரசான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவத்திற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எவராயினும் தக்க பதிலடி கொடுப்போம் என்று வெள்ளைமாளிகையில் உரையாற்றினார். இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வருகிற 30-ஆம் தேதி வரை அமெரிக்கா தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாத கோரசான் அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று விட்டதாக அறிவித்தது. இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தை தலீபான்கள் சீல் வைத்து பூட்டியுள்ளனர். இதனால் உள்நாட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் தரை வழியாகவே பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஆப்கானில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்கா நாட்டு மக்களை காபூலில் இருந்து உடனடியாக வெளியேற்றும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.