கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் திருட்டு வேலையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை போலீசார் காவல் நிலையத்தின் வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் பல்வேறு செல்போன்களையும் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். தற்போது இவைகள் திருட்டுப் போனதாக கூறி புகார் வந்துள்ளது.
மேலும் இதுகுறித்து விசாரிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கூடங்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும் தனித்தனியாக விசாரித்தனர். பின்பு அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்த்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், கூடங்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் கிரேசியா (29)என்ற பெண் போலீஸ் இரவு பணியில் இருந்த போது தன் கணவன் அன்புமணி உதவியுடன் காவல் நிலைய வளாகத்தில் உள்ள 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. இரவு பணியில் இருந்த கிரேசியா திருடும் போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆப் செய்து வைத்துள்ளார்.
இதனை கண்டறிந்த போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காவல் நிலையத்திலேயே பெண் காவலர் தன் கணவருடன் சேர்ந்து திருடிய சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.