Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கார் செட்டில் பற்றி எரிந்த தீ…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு

கார் செட்டுக்கு தீவைத்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் முஸ்லிம் தெருவில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி இணை அமைப்பாளராகவும், பள்ளிவாசல் செயலை தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள செட்டில் கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் ஷாஜகான் அதே பகுதியில் தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டிற்கு தேவையான மரகதவுகள், ஜன்னல்கள் மற்றும் பிளம்பிங் பொருட்கள் போன்றவற்றை வாங்கி கார் செட்டில் வைத்துவிட்டு ஷாஜகான் வழக்கம்போல் உறங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த செட்டில் இருந்து தீப்பற்றி எரிவதை கண்டு அருகில் இருப்பவர்கள் ஷாஜகானுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி ஷாஜகான் வந்து பார்த்தபோது கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடு கட்டுவதற்கு வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செட்டில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். ஆனால் அதற்குள் அங்கிருந்த 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இவ்வாறு எரிந்து நாசமான பொருட்களின் மொத்த மதிப்பு 20 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஷாஜகான் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார் செட்டுக்கு தீவைத்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |