சாலை ஓரம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள் 55 வயதுடைய முருகன் மற்றும் 70 வயதுடைய ராமையா . இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். தினமும் கங்கைகொண்டான் அருகே நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள புல்வெளியில் ஆடுகளை மேய்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் இன்று இருவரும் ஆடுகளை மேய விட்டு சாலை ஓரம் உள்ள புல்வெளியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் .
அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த மாருதி கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து புல்வெளியில் அமர்ந்திருந்த முருகன் மற்றும் ராமையா மீது மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய செல்வராஜ் என்பவர் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இவர் குடும்பத்துடன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இட்ட மொழியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது வண்டியை ஓட்டிய செல்வராஜ் கண்ணயர்ந்து தூங்கியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் செல்வராஜிடம் விசாரணை செய்து வருகின்றனர்.