காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பின், பொது மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்கும் அடிப்படையிலான கூட்டு உரிமத்தை பெற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) திட்டமிட்டு உள்ளது. நாட்டில் இதுவரையிலும் 4.2% மக்களுக்கு மட்டும்தான் காப்பீட்டு பலன்கள் கிடைக்கிறது. காப்பீட்டின் பலன்களை சமூகத்தின் மேலும் பல நிலைகளுக்குக் கொண்டு செல்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதனை கருத்தில் கொண்டு காப்பீட்டு சட்டம் (1938), காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய சட்டம் (1999) போன்றவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அதற்காக காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவை வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
காப்பீட்டு நிறுவனங்களுக்குக கூடுதல் சலுகைகளை அளிக்கும் அடிப்படையிலான வழிமுறைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளது. பொதுக்காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வேளாண் காப்பீடு உட்பட பல பிரிவுகளில் இயங்கும் நிறுவனங்கள் ஒரே கூட்டு உரிமத்தை பெறுவதற்கான வழிமுறைகளும் மசோதாவில் இடம்பெற்றுள்ளது. அந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், கூட்டு உரிமத்தை பெற விண்ணப்பிக்கப்படும் என எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.