Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் முன்பு போல இல்லை; இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் – ஜோதிராதித்யா!

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததில் அக்கட்சியின் இளம் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருந்தது.

எனினும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை தேர்தல் வருவதையொட்டி நேற்று காங்கிரஸிலிருந்து விலகி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாஜகவில் இணைவதாக அறிவித்தார். இதையடுத்து அம்மாநிலத்தைச் சேர்ந்த 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று பதவி விலகினர்.

இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை ஜே.பி.நட்டா ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். இதையடுத்து ஜோதிராதித்யாவை மனமாற வரவேற்கிறேன் என கூறிய ஜே.பி.நட்டா, அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய ஜோதிராதித்யா, நான் பார்த்து வியந்த காங்கிரஸ் இப்போது இல்லை என கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். என் இதயம் கவர்ந்த மாநிலமான மத்தியபிரதேசத்தில் 18 மாதங்களாக நான் நினைத்ததை செய்ய முடியவில்லை.

விவசாயிகளுக்கு தேவையான நிதி கிடைக்கப்பெறவில்லை, மாத உதவித்தொகை கிடைக்கும் என்றனர், ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. மத்தியபிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நாள் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றும் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு, கொள்கைகளைக் கண்டு வியக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |