உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் கொண்டதாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய கொடிய வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதை அடுத்து ஒமைக்ரான் வைரஸ் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து தமிழகம் வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். ஏதேனும் அறிகுறி கண்டறியப்படும் பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவர். கொரோனா இல்லை என உறுதியானால், 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தபடுவர். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தொடர்ந்து 7 நாட்களுக்கு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர் என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.