சென்ற ஆண்டின் மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த மக்களுக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவு வழங்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு அதாவது கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு ரேஷன் கார்டு வைத்துள்ள 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் போதிய உணவு தானியங்களை இந்திய உணவு கார்பரேஷன் வழங்கியது. இந்நிலையில் தற்போது பிரதமரின் கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.