TNPSC முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TNPSC குரூப் 4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிக இருந்து வந்த ஜெயக்குமார் சற்று முன்பாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்த அவரை தேடி சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். சுவரொட்டி ஒட்டியும் தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார். அவருக்கு வருகிற 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள். குறிப்பாக தேர்வு முறைகேடுகளில் இடைத்தரகராக செயல்பட்ட அனைவரிடமும் இவர்தான் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார்.
இவர் வீட்டில் கைப்பற்றபட்ட ஆவணங்கள் அனைத்தும் தடவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதது. இதற்கிடையில் ஜெயக்குமாரின் கூட்டாளிகளும் கைதாகி இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார் இன்று காவலில் எடுப்பதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் எழும்பூர் நீதிமன்றத்தில் தான் இந்த வழக்கு நடந்து வருகின்றது.