மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமரை நேரில் சந்திக்க உள்ளார்.
தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சி குழு நாளை (ஜூலை 15) டெல்லி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வழங்கவுள்ளனர். தற்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளை டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்திக்க இருக்கிறார். அவருடன் காவிரிப் தொடர்பான கர்நாடக அதிகாரிகள் அனைவரும் நாளை டெல்லி வரக்கூடிய சூழ்நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.