எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது.
இதனை கண்டித்து பாமகவினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் தமிழக அரசு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் ஒத்தி வைத்திருந்ததையடுத்து, இந்த வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை எந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனமும் கூடாது என்றும், ஏற்கனவே செய்யப்பட்ட பணி நியமனம், மாணவர் சேர்க்கையை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், 10.5 சதவீத உள்ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் கிடைக்கவில்லை என்றாலும் அதை பெற்றே தீருவோம் அதற்கான பணிகள் நடைபெறுகின்றன என்று தெரிவித்துள்ளார்.