விடுதிக் கட்டண உயர்வை எதிர்த்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லவிருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 400 விழுக்காடு உரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி நவம்பர் 18ஆம் தேதி பேரணியாக சென்றனர்.
இதையடுத்து, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு உயர் மட்டக்குழு அமைத்தது. எந்த உதவித்தொகையும் பெறாத வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட்டது. இதனை, கண் துடைப்பு நடவடிக்கை என மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி அமைதி பேரணி சென்றனர். ஆனால், அவர்களைக் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். தாங்கள் மேற்கொண்ட பேரணியை தொடர அனுமதிக்குமாறு மாணவர்கள் காவல் துறையினரை கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தடியடி நடத்தி மாணவர்களின் பேரணியை கலைத்தனர்.எய்ம்ஸ் மருத்துவமனையை நோக்கி சில மாணவர்கள் சென்றதால், தடியடி நடத்தப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.