ஈரோட்டில் ஒரே நாளில் 5 இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்மகும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை அடுத்த கரூர் to ஈரோடு செல்லும் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள எமகண்டனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது தோட்டம் கொடுமுடி ஊர் பகுதிக்கு அருகாமையில் உள்ளது. இவரது தோட்டத்தில் கடந்த சில நாட்களாக தோட்டவேலை நடைபெற்று வருவதால் இவர் தனது குடும்பத்தினருடன் தோட்டத்திலுள்ள வீட்டிலேயே தங்கிவிட்டார்.
பின் நேற்றைய தினம் மீண்டும் எமகண்டனுர் ஊரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் உள்ள ஒன்றரை பவுன் நகை 2500 ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதே போல் அவரது பக்கத்து வீட்டிலும் அதே திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
அங்குள்ள பீரோலையும் உடைத்து ரூபாய் 2500 பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும் அதே ஊரைச் சேர்ந்த அங்கன்வாடி பகுதியிலும், மளிகைக்கடை ஒன்றிலும், அன்புதாசன் என்பவரது வீட்டிலும் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சித்துள்ளனர். ஆனால் அங்கு பொருட்கள் ஏதும் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒரே நாளில் 5 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பதால், இவை அனைத்தையும் ஒரே கும்பல் தான் செய்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் யூகித்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.