தீவிரவாதத்தை முழுவதுமாக ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரத்தில் குவாட் அமைப்பினுடைய 4 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்திருக்கிறது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற 4 நாடுகள் குவாட் என்ற நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அமைப்பை தோற்றுவித்திருக்கின்றன.
இதில் பங்கேற்ற வெளியுறவு துறை மந்திரியான ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, கொரோனா பரவலை சமாளிப்பது மற்றும் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கி உதவுவது ஆகிய அனுபவங்களை பகிர்ந்தோம். ஆஸ்திரேலியா தங்கள் எல்லைகளை திறப்பதற்கு என் வரவேற்புகள்.
இது, இந்தியாவிற்கு திரும்பி வர காத்திருக்கக்கூடிய மாணவர்கள், தற்காலிகமாக விசா வைத்துள்ளவர்கள், பிரிந்த குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும், இந்தியா-சீனா உறவுகள் தொடர்பில் விவாதம் செய்தோம். பக்கத்து நாடுகளுக்குள் என்ன நிகழ்கிறது? என்பது குறித்து ஒருவருக்கு ஒருவர் தெரிந்து கொண்டோம்.
தீவிரவாதம் தொடர்பான கவலைகளை பகிர்ந்தோம். எல்லை தாண்டிய தீவிரவாதம் வருத்தமளிக்கிறது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.