தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவருடைய கணவர் மாதவன். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு தற்போது சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்கள் தீபாவை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தீபா கூறியதாவது, சுமார் 5 வருடங்களாக நான் குழந்தை பெறுவதற்காக தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
இதற்கு முன்பாக நான் பலமுறை கருவுற்ற போதிலும் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. இதனால் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கலில் இருந்த எனக்கு தற்போது சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் எங்களுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதை இப்போது கூற விரும்பவில்லை. ஏனெனில் எனக்கும் என்னுடைய கணவருக்கும் பல பக்கங்களில் இருந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே நாங்கள் எங்களுடைய உறவினர்களிடம் ஆலோசனை செய்த பிறகு தான் என்ன குழந்தை என்ற விவரத்தை வெளியிடுவோம்.
இன்னும் ஓரிரு நாட்களில் என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதை நானும் என் கணவரும் அறிவித்து விடுவோம். எங்களுக்கு பல வருடங்கள் கழித்து குழந்தை பிறந்துள்ளதால் அதை வளர்ப்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். மேலும் இது தொடர்பான தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இவ்வாறு தீபா பேசியதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.