பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டால் ரசாயனம் சிறிய அளவுகளில் கலந்திருப்பதாக 2018ல் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் புலனாய்வு ஆய்வில் தகவல் வெளியானது முதல் இந்த நிறுவனத்தின் பேபி பவுடரால் புற்றுநோய் ஏற்படுமா ? என்ற விவாதம் தீவிரமாக பரவி பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் பேபி பவுடர் மற்றும் சவர் டூ சவர் டால்கம் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தியதால் தங்களுக்கு கருப்பை புற்றுநோய், மெசோதிலியோமா உள்ளிட்ட வகை புற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவில் ஏராளமான பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு அளிக்கவும் அந்நிறுவனத்திற்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்த வரிசையில்,
தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 890 கோடி அபராதம் விதித்து மன்ஹாட்டன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான பேபி பவுடர் மற்றும் ஷவர் டூ ஷவர் பவுடரை 50 ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில்,
அதிலுள்ள ஆஸ்பெஸ்டாஸ் நச்சுப்பொருள் காரணமாக தனக்கு மெசோதிலியோமா என்ற புற்று நோய் ஏற்பட்டதாக டோன்னா ஓல்சன் என்ற பெண் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக பரவிய தகவல் உண்மையாக இருக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.