திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. உலகம் பட்டியில் உள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் , அலங்காநல்லூர், பாலமேடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த இந்த காளைகளை அடக்க 400க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர் . காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற பெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து காளை ஒன்று பரிதாபமாக உயிர் இழந்தது.
நம்பியம்பட்டு மற்றும் கொத்த கோட்டை ஆகிய பகுதிகளில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. ஏராளமான பொதுமக்கள் மஞ்சு விரட்டு போட்டியை கண்டுகளித்தனர்.
இந்நிலையில் சின்னக்பள்ளிகுப்பம் சேர்ந்த ராமர் என்பவருக்கு சொந்தமான காளை ஒன்று அப்பகுதில் ஓடி கொண்டிருந்த பொழுது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிர் இழந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த மஞ்சுவிரட்டு போட்டிகளை குறிவைத்து இளைஞர்கள் மத்தியில் சூதாட்டம் நடைபெற்றது. காவல்துறையினர் விரட்டியும் கூட செல்லாமல் தொடர்ந்து மூன்று கட்டை சூதாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.