Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நானே காளைகளை அடக்கினேன்… ! ஆள்மாறாட்டம் செய்யல…! தொடரும் ஜல்லிக்கட்டு சர்சை …!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பெறுவதற்காக ஆள்மாறாட்டம் நடைபெற்றது என்று வெளியான குற்றச்சாட்டை வெற்றி பெற்ற  மாடுபிடி வீரர் கண்ணன் மறுத்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி  ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் சுற்றில் காளைகளை அடக்க ஆரம்பித்த கண்ணன் இறுதி சுற்று வரை விளையாடி 12 காளைகளை அடக்கியதால் அவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடையாக கொடுத்த 6,00,000 ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டியில் முதல் பரிசான காரை பெறுவதற்காக ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த குற்றச்சாட்டில்,  33வது எண்ணாக பதிவு செய்யப்பட்ட ஹரி கிருஷ்ணன் முதல் மூன்று சுற்றில் விளையாடி காளைகளை அடக்கிய நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக அவர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் கண்ணனிடம் தனது பனியனை கொடுத்து விட்டு வெளியேறியதால் அந்த பனியனை கண்ணன் போட்டுக்கொண்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை 9 காளைகளை அடக்கி  ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற கருப்பணன்  என்பவர் மாவட்ட ஆட்சியரிடம்  புகார் அளித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்து கண்ணன் கூறும் போது, “முதல் சுற்றில் இருந்து நான் காளைகளை அடக்கியதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் ஜாதி நோக்கம் உள்ளது .  ஜனவரி 27ஆம் தேதி முதலமைச்சர் மதுரை வரும்பொழுது எனக்குரிய பரிசு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்” என்று அவர் கூறினார். இதற்கிடையில் இந்த  ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா ? என்பது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டுமென்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |