ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் இருப்பதாக கூறி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக ஜெய்பீம் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் சூர்யாவுக்கு ஆதரவாக திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கருணாஸ், சூர்யாவிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாமகவினர் கூறினர்.
அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து படத்தில் குறிப்பிட்ட காட்சிகள் உடனடியாக நீக்கப்பட்டன. ஆனால் மீண்டும் மீண்டும் பாமகவினர் வம்படி செய்வதும் திரைப்பட சுவரொட்டிகளை கிழிப்பதும் அரம்பத்தனத்தின் உச்சம். இதனை திரைத்துறையினர் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். நீங்கள் சொன்னதை செய்த பிறகும் இவ்வாறு நீங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு செய்வது தவறு என்று அவர் கூறியுள்ளார்.