இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பின்னணி பற்றிய தொகுப்பு
பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது.
பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றி இக்குழு ஆராய்ந்தது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது. ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று பெரும் கடையடைப்பு நடத்த முன்னேற்பாடுகள் நடந்தன. கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் சுயவிழிப்பின் பேரில் கலந்து கொண்டனர். இப்போக்கு ஆட்சியாளருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
தில்லியிலும் கடையடைப்பு நடந்தது. அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர். மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்புக் கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும் பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை.