தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று கூறும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆரவாரம் செய்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேரன்-தரணி தம்பதியினரின் 4 வயது மகனான லக்ஷன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். இந்த சிறுவன் விடுமுறையை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தன்னுடைய தாத்தா-பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அருகில் உள்ள திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் ராஜராஜ சோழன் குதிரையில் வருவதை பார்த்த சிறுவன் தானும் ராஜராஜ சோழன் வேடத்தில் குதிரையில் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். தன்னுடைய ஆசையை சிறுவன் தாத்தா-பாட்டியிடம் கூறவே பேரனுடைய ஆசையை அவர்களும் நிறைவேற்றி வைத்துள்ளனர். மேலும் சிறுவன் ராஜராஜ சோழன் வேடத்தில் குதிரையில் அமர்ந்து தியேட்டரை வலம் வந்த காட்சி படம் பார்க்க வந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.