பாஜக ஆளும் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை பார்த்த தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பு களையும் பறிக்கும் சட்ட விரோத நடவடிக்கையை எடுத்தது வரும் பாஜக மாநில அரசுகளை மத்திய பாஜக அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு திமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
உடலுழைப்பு தொழிலாளர்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பதை பாஜக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகளின் பக்கம் பாஜக. பிழைப்புக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்ற லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஊரடங்கு நேரத்திலும் கடும் அவதிக்குள்ளாகின்றனர் . அவர்களின் குடும்பம் வறுமையில் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் நிலையில் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணத்தை வசூல் செய்வது இதயத்தில் ஈரமற்ற தன்மையை நாடு கண்டுள்ளது.
தொழிலாளர்கள் அனுபவித்துவரும் உரிமைகள் ஏதோ பாஜக மாநில முதல்வர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து பெற்றவை அல்ல. 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பேரணி நடத்தி, ரத்தம் சிந்தி, உயிரை தியாகம் செய்து பெற்ற உரிமைகள். எனவேதான் தலைவர் கருணாநிதி 1986ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற பேரணியில் தொழிலாளர் நலனுக்காக அறிவித்த முக்கியமான முழக்கம் இனி6 மணிநேரம் வேலை என்ற கோரிக்கை வைப்போம் என முழக்கமிட்டார்.
ஆனால் பாஜக ஆளும் மாநிலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை எல்லாம் அமல் படுத்த வேண்டாம் என்ற முடிவை எடுத்திருப்பது தொழிலாளர்கள் நெஞ்சில் நஞ்சை பாய்ச்சுவதற்கு சமம். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் முதலாளிகளுக்கு தாரை வார்த்து 44 மேற்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை 4 ஆக குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய பாஜக அரசுக்கு துணைபோகும் நோக்கில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
இது அபாயகரமான போக்கு. தொழிலாளர்களுக்கு நிரந்தரமான ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்காக என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து வருகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக தொழிலாளர் நலச்சட்டங்கள் மதிக்கத் தேவையில்லை என்று பாஜக மாநில முதல்வர்கள் உத்தரவு போடுகிறார்கள். நாடு முழுவதும் ஆளுகின்ற கட்சி மாநிலத்தில் முரண்பாடான முடிவு எடுப்பது ஏன்?
தொழிற்சாலைகளைத் திறப்பதில் தவறில்லை ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்ய தொழிற்சாலைக்கு தேவையான நிவாரணங்களை மத்திய மாநில அரசுகள் அளிப்பதில் தவறில்லை. ஆனால் தொழிலாளர்களின் உரிமை, பாதுகாப்பு கண்மூடித்தனமாக அழிக்கப்படுவதை எந்த காரணம் கொண்டும் திமுகவால் ஏற்றுக் கொள்ள முடியாது. தொழிலாளர்களுக்கு முக கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆவின் ஊழியர்கள் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானார். இதுபோன்ற நிலைமை எந்த தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. பாஜகவின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கையை அப்படியே காப்பியடித்து வரும் அதிமுக அரசு தமிழகத்தில் அதுமாதிரியான எந்த தொழிலாளர்கள் விரோத முடிவினை எடுக்க கனவிலும் கூட எண்ணிப் பார்த்து விடக்கூடாது என எச்சரிக்க விரும்புகிறேன். மத்திய அரசு கார்ப்பரேட் மனப்போக்கில் இருப்பதை கழற்றி வைத்துவிட்டு, தொழிலாளர்களுக்காக தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
பாஜக ஆளுகின்ற உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளை நீக்க கோரி பிரதமர் உடனே தலையிட்டு அனைத்து மாநில அரசுக்கும் சிறப்பான அறிவுரை ஒன்றை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவிப்பதாக முக.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக கண்டித்துள்ளார். மாநில அரசியலில் இருந்து கொண்டு தேசிய அரசியலை விமர்சிக்கும் ஸ்டாலினின் போக்கு திமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.