தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு அரசின் சலுகைகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2 வது அலை குறைந்துள்ளதால் கல்லூரிகளில் கடந்த ஜூலை மாதம் முதல் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தற்போது மாணவர் சேர்க்கை முடிவடைந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இங்கு 8,10 வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை உள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இதனையடுத்து தற்போது தூத்துக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குனர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பில், தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிற் பயிற்சியை பெற விரும்புவோர் 8 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு முடித்த மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஐந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு நகல், போன்ற ஆவணங்களுடன் நேரில் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிறுவங்கள் நிலையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ரூபாய் 750 உதவித் தொகை, இலவச பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகம், லேப்டாப், வரைபட கருவிகள், சீருடை, காலணிகள், பயிற்சிக்கு தேவையான பொருட்கள், போன்ற அனைத்தும் அரசு வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.