தாலுகா அலுவலகத்தில் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் உள்ள இரண்டாவது வார்டில் தோட்டம், வயல் ஆகியவை இருப்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் சென்று வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிநபர்கள் அந்த பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்து அடைத்து விட்டனர். இதனால் பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊர் நாட்டாமைகளான சிதம்பரம் மற்றும் மாடசாமி ஆகியோரின் தலைமையில் பொதுமக்கள் இணைந்து தாலுக்கா அலுவலகத்தின் முன்பு திடீரென போராட்டம் நடத்தியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் பேச்சிமுத்து என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் தனிநபர்கள் தாங்கள் பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்து அடைத்து விட்டதால் எங்களால் அப்பகுதிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றோம் அதனால் ஆக்கிரமிப்பு செய்த பொது சாலையை அடைத்ததை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அதிகாரியிடம் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் ஆக்கிரமிப்பு செய்த சாலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.