இத்தாலியில் வேலைக்கு செல்பவர்களுக்கு கிரீன் பாஸ் கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகளவில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்றானது இன்றுவரை ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் கொரோனாவை எதிர்க்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்கி வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்த சிலரிடையே இன்னும் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல முடியும் என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து இத்தாலி நாட்டு அரசு கூறியதாவது, “வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி முதல் இத்தாலியில் கிரீன் பாஸ் இருந்தால் மட்டுமே அலுவலகம் செல்ல முடியும். குறிப்பாக முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் இருவருக்குமே இந்த விதி பொருந்தும். மேலும் விதியை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். அதோடு கிரீன் பாஸ் இல்லாமல் 5 முறைக்கு மேல் வேலைக்கு வரும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்” என்றும் கூறப்பட்டுள்ளது
மேலும் ரோம் நகரத்தின் பியாஸ்ஸா டெல் போபோலோ என்ற பகுதியில் கிரீன் பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தாலி நாட்டு மக்கள் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போலீசார் தண்ணீர் பாய்ச்சி கூட்டத்தை கலைத்தனர். மேலும் போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நிகழ்த்தப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.