Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

7 நாட்கள் நடைபெறும்… உத்தரவிட்ட முதலமைச்சர்… தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ஆம் அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை தடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முதல் வருகின்ற 7ஆம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் சைக்கிளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலம் மோகனூர் சாலை, பரமத்திவேலூர் சாலை, உழவர் சந்தை, கோட்டை ரோடு வழியாக சென்று சேலம் சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே நிறைவடைந்துள்ளது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் என்பதை அறிவேன், அதை தவிர்க்க பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிவேன், மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 8அடி இடைவெளியை கடைபிடிப்பேன் என்ற உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

அப்போது கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சுகாதார துணை இயக்குனர் சோமசுந்தரம், மாவட்ட நகராட்சி ஆணையர் பொன்னம்பலம், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், தேசிய நலக்குழும தொடர்பு அலுவலர் டாக்டர் ரங்கநாதன் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து சைக்கிளில் சென்றவர்கள் கொரோனா குறித்த விழுப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டுக்கொண்டே சென்றுள்ளனர்.

Categories

Tech |