ஐபிஎல் தொடருக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியினர் மேற்கொண்ட பயிற்சி இன்றுடன் நிறைவுப்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோத இருந்தன. இதனால் தல தோனி கடந்த மார்ச் 1 ஆம் தேதி சென்னை வந்து, 2 ஆம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
தோனியுடன் முரளிவிஜய், ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். சிஎஸ்கே வீரர்களின் பயிற்சி ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். சிஎஸ்கே அணியின் பயிற்சி வீடியோவும், புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக தோனியின் புகைப்படம் இணையத்தில் வலம் வந்தது.
இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என பிசிசிஐ அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியினர் பயிற்சியை இன்றுடன் நிறைவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நாளை முதல் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிரட்டி வரும் கொரோனா வைரசுக்கு 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.