மும்பையை தலைமை இடமாக கொண்டு ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கக் கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடு தான் விளையாட்டுகள் வழங்கப்படுகிறது. அதோடு விளையாட்டு களில் அடிமையாவதை தடுப்பதற்கான சோதனைகளும் இருக்கிறது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு தடை விதித்ததை உயர் நீதிமன்றம் செல்லாது என்று கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. ஆனால் தற்போது ரம்மி மற்றும் போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு அவசர தடைச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ரம்மி மற்றும் போக்கர் போன்ற விளையாட்டுகளை சூதாட்டம் என்று கருத முடியாது. இதை திறமையான விளையாட்டுகள் என்று தான் கூற வேண்டும். திறமையுள்ளவர்கள் கண்டிப்பாக விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.
அதன்பிறகு நாகலாந்தில் போக்கர் மற்றும் ரம்மியை திறமையான விளையாட்டுகள் என்று வகைப்படுத்தி உள்ளது. இதேபோன்று பல மாநிலங்கள் போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டாகவே கருதுவதால், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்ததை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு இன்னும் கூட சில வழக்குகள் இருப்பதால் அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.