கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியதால் இத்தாலி அரசாங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே பயமுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்து அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஓன்று இத்தாலி. இந்நாட்டில் கொரோனா தற்போது நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் இத்தாலி அரசாங்கம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, அந்நாட்டின் லோம்பர்டு பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஐரோப்ப நாடான இத்தாலியில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது. எனவே இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் முயற்சிகளில் ஒன்றாக குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஸ்கை ரிசார்ட்டுகள் மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது வேகம் காட்ட தொடங்கியுள்ள கொரோனாவால் இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை 230 ஐ தாண்டி விட்டது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் புதிதாக நேற்று ஒரேநாளில் மட்டும் 1,200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நாட்டில் (இத்தாலி) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 5,883 ஆக உயர்ந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்னர்.