கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை மாறியதோடு சில விசித்திரமான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
அதில் ஒரு பகுதியாக இஸ்ரேலில் தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்களுக்கு அங்குள்ள ஒரு பார் நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இஸ்ரேலில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அந்த பார் நிறுவனம் இலவசமாக பானம் வழங்க முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் மொத்த மக்கள்தொகை 90 லட்சம். அதில் 43% பேருக்கு கொரோனா வைரஸிற்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளும் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக டெல் அவிவ் நகரில் உள்ள ஜெனியா பார் அந்நாட்டு அரசுடன் கூட்டணி அமைத்து தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இலவசமாக பானங்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூடுதலாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உடனடியாக மது அருந்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே மது சாராத பானங்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படும் என்று பார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.