Categories
உலக செய்திகள்

“மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்”… இஸ்ரேல் பிரதமர் பதிவிட்ட டுவிட்..!!

இஸ்ரேல் பிரதமர் பென்னட், இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் பிரதமராக பணியாற்றி வந்த பெஞ்சமின் நேட்டன்யாஹு மீது கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோசடி மற்றும் ஊழல் புகார்கள் எழுந்து வந்த நிலையில் அவருடைய செல்வாக்கானது மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்தது. இதற்கிடையே பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹு-வின் லிக்குட் கட்சி கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் பெரும்பான்மையான இடத்தை பிடிக்காததால் இரண்டாவது முறையாக மீண்டும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால் அதிலும் பெஞ்சமின் நேட்டன்யாஹு-வின் லிக்குட் கட்சி பெரும்பான்மை இடத்தை பிடிக்கவில்லை. அதன் பிறகு கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பெருமான்மை இடம் எந்த கட்சிக்கும் கிடைக்காத சூழலில் புளூ அண்ட் ஒயிட் மற்றும் லிக்குட் கட்சி கூட்டணியில் நிறுவப்பட்ட ஒற்றுமை அரசில ஏற்பட்ட சில குழப்பங்கள் காரணமாக மீண்டும் கலைக்கப்பட்டது. இதனால் நான்காவது முறையாக கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.

அதில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பெஞ்சமின் நேட்டன்யாஹு-வின் லிக்குட் கட்சி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற தவறிவிட்டது. இதன் காரணமாக பெஞ்சமின் நேட்டன்யாஹு புதிய அரசை அமைக்க முயற்சி செய்த போது பலன் கிடைக்காததால் மீண்டும் இஸ்ரேலில் ஐந்தாவது முறையாக பொது தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் பெஞ்சமின் நேட்டன்யாஹு-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு கூட்டணி அமைத்துள்ளனர்.

மேலும் எட்டு கட்சிகளையும் உள்ளடக்கிய இந்த எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு 60 இடங்கள் தேவை என்ற நிலையில் 61 இடங்கள் உள்ளதால் புதிய ஒற்றுமை அரசை எதிர்க்கட்சிக் கூட்டணி நிறுவியுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. அதில் நாடாளுமன்றத்தில் உள்ள 120 உறுப்பினர்களில் 59 பேர் புதிய அரசுக்கு எதிராகவும், 60 பேர் புதிய அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. அதிலும் ஒரு உறுப்பினர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நப்தாலி பென்னட் என்பவர் இஸ்ரேலின் 13-ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமரான நஃப்தாலி பென்னட்-க்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் “இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்றுள்ள மரியாதைக்குரிய நஃப்டாலி பென்னட்-க்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும், அடுத்த வருடம் நாம் தூதரக உறவுகளை மேம்படுத்தும் வகையில் 30 வருடங்களை கொண்டாடும் சமயத்தில் தங்களை சந்திக்கவும், நட்புறவை இரு நாடுகளுக்கிடையே ஆழப்படுத்தவும் எதிர்நோக்கி காத்திருப்பதாக” தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பென்னட் தனது ட்விட்டர் பக்கத்தில் ” இந்திய பிரதமர் மோடி அவர்களின் வாழ்த்திற்கு நன்றி எனவும், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்த மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |