இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
இஸ்ரேல் நாட்டில் அதிக காலத்திற்கு பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்து பிரதமரானார். ஆனால் கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்காததால், கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ராஜினாமா செய்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் எந்த கட்சியினரும் பெரும்பான்மை பெறவில்லை.
எனவே, யாமினா என்ற கட்சியினுடைய தலைவர் நப்தாலி பென்னட், கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து பிரதமர் ஆனார். ஒரு வருடம் ஆட்சியில் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் கூட்டணி கட்சிகள் அவரின் அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுவிட்டன. எனவே, மீண்டும் ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதனைத்தொடர்ந்து இன்று வாக்குள் எண்ணப்பட்டு வருகிறது. 120 தொகுதிகள் மொத்தமாக இருக்கும் நிலையில், 86% வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன. அதில் 65 தொகுதிகளில் நெதன்யாகு வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியானது. எனவே பெரும்பான்மை ஆதரவுடன், பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமர் ஆவார் என்பது உறுதியாகிவிட்டது.