வழிப்பாதை தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் புறம்போக்கு நிலத்தில் செல்லும் பாதை தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு தரப்பினர் பிரச்சினைக்குரிய பாதை எங்களுக்கு சொந்தம் என்றும், மற்றொரு தரப்பினர் பல மாதங்களாக நாங்கள் தான் இந்த வழி பாதையைப் பயன்படுத்தி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஆலங்குடி தாசில்தாரான செல்வநாயகி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது தாசில்தார் கோவில் இருக்கும் இடம் புறம்போக்கு இடம் என்றும் கோவில்களில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் பேச்சுவார்த்தையில் உடன்படாத அவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.