இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் உள்ள கோவிலில் பூஜை நடத்துவது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாலையில் கோவிலுக்கு இருதரப்பினரும் வழிபடச் சென்றபோது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினரை சேர்ந்த சுயம்பு, துரைசாமி, வானதி, விஜயகுமாரி மற்றும் மற்றொரு தரப்பினரை சேர்ந்த பாண்டி, தில்லைக்கனி, பிரேமலட்சுமி ஆகியோரும் காயமடைந்தனர்.
தற்போது இவர்கள் 7 பேரும் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து துரைசாமி கூடங்குளம் காவல்நிலையத்தில் சுந்தர், நெதர்சன், ரவிராஜ், சீலா உள்பட 22 பேர் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மற்றொரு தரப்பினரான பாண்டி கண்ணபெருமாள், ரவிகுமார், அலெக்ஸ்பாண்டியன், நரேஷ்குமார், விஜய் உள்பட 25 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தர், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளனர்.