சொகுசு காரில் குடும்பத்துடன் சென்று கோழிகளைத் திருடிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி வள்ளலார் பகுதியில் பூபாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறைச்சிக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக பூபாலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோழி இறைச்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் ஒரு சொகுசு கார் ஒன்று அவ்வழியாக சென்று கோழி இறைச்சி கடையின் முன்பு நிற்கின்றது. அந்தக் காரின் பின் இருக்கையில் இளம் பெண் மற்றும் ஒரு சிறுவன் அமர்ந்து உள்ளனர். இதனையடுத்து அந்த காரை ஓட்டி வந்த நபர் காரில் இருந்து கீழே இறங்கி சிறிது நேரம் அங்கும் இங்கும் யாராவது வருகின்றனரா என்பதை கண்காணித்து விட்டு காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு கோழி இறைச்சி கடைக்குள் சென்று உள்ளார்.
அதன் பிறகு அந்த நபர் தான் கொண்டு செல்லும் இரும்பு கம்பியை கொண்டு கோழிகளை அடைத்து வைத்திருக்கும் இரும்புக் கூண்டின் பூட்டை உடைத்து விட்டு அதிலிருந்த நாட்டுக் கோழிகள் அனைத்தையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்லும் காட்சிகள் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இவ்வாறு அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் இது போன்று ஏற்கனவே சொகுசு காரில் கொரட்டூர் பகுதியில் கணவன், மனைவி போல் வந்த இருவர் வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை திருடிச் சென்ற கும்பலை சேர்ந்தவர்கள் தானா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.