2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 9 ரன்களிலும், அகர்வால் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அக்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, ஜிதேஷ் சர்மா மட்டுமே தாக்குப்பிடித்து, அதிகப்பட்சமாக 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமத் , லலித் யாதவ் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களான பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆதிரடியாக விளையாடினர். 3.3 ஓவர்களிலேயே 50 ரன்களை இந்த ஜோடி எட்டியது. பவர் பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் குவித்தனர். 20 பந்துகளில் 41 ரன்கள் விளாசி பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இறுதிவரை அதிரடியை தொடர்ந்து 10.3 ஓவர்களை ஆட்டத்தை முடித்தார் டேவிட் வார்னர். அவர் 30 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணிக்கு இது மூன்றாவது வெற்றி ஆகும். பஞ்சாப் அணிக்கு இது நான்காவது தோல்வி.