2021 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி முன்னேறி உள்ளது. அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ்,பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடுமையாக போராடும்.இதனிடையே இன்று நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதால் வெற்றி பெறும் முனைப்புடன் ராஜஸ்தான் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது.