அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணாமாக தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்து சேவைகள் நிறுத்த வைக்கப்பட்டிருந்தது. இன்று முதல் தமிழகத்தில் 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்று 6 மண்டலங்களில் இருந்து 5,659 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
6 மண்டலங்களில் 2,866 நகரப் பேருந்துகள், 2,637 புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மலை கிராமங்களுக்கு 156 பேருந்துகள் இயக்கப்படுகிறது என தகவல் அளித்துள்ளார். சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் எஸ்ஈடிசி பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
பயணிகள் குறைவாக இருப்பதால் தனியார் பேருந்துகள் இயக்கம் இல்லை, பயணிகள் வரத்தை பொறுத்து தனியார் பேருந்துகள் இயக்க விரைவில் முடிவு எடுக்கப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கன்னியாகுமரியில் காய்கறி சந்தையும், பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் இருப்பதால் பேருந்து சேவை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.