சேலத்தில் கொரோனா பாதித்த நபர்கள் இருக்கும் பகுதியை கண்டறிய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. நாளை (14-04-2020) வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு புதிய நடைமுறைகளை கையிலெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் வீ ட்ரேஸ் (vee trace) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
சேலம் மாநகராட்சியில் யாருக்கெல்லாம் கொரோனா தொற்று உள்ளது, அருகாமையில் இருப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா? என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 70 இடங்களில் கொரோனா தொற்று இருப்பவர்கள் உள்ளதால் அந்த இடங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சி, சோனா கல்லூரி மற்றும் சென்னை வீ டெக்னாலஜி நிறுவனம் இணைந்து கைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளனர். வீ ட்ரேஸ் செயலியை கூகிள் பிலே ஸ்டோருக்கு சென்று டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இதில் கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது, அவர்கள் எந்த பகுதியில் உள்ளனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
10 கிமீ இடைவெளி, 100 கிமீ இடைவெளி, 1 கிமீ இடைவெளி என வகைப்படுத்தி காட்டுகிறது. இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சதிஷ் , வீ ட்ரேஸ் செயலியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் இருக்கும். அதை பார்த்து அந்த பகுதிக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே செல்கிறார்களா என மாநகராட்சி அதிகாரிகள் ட்ராக் செய்கிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.